search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி கைது"

    திருவனந்தபுரம் அருகே அரசு அலுவலகத்தில் வைத்து 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை அடுத்துள்ளது பாலிக்கல்.

    இங்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த அலுவலகத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் விபரீத எண்ணம் கொண்ட விஜயகுமார் அந்த சிறுமியை ஏமாற்றி அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு முத்த மழை பொழிந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அப்போது அந்த அலுவலகத்தில் வேறு யாரும் இல்லாததால் அந்த சிறுமிக்கு உதவி கிடைக்கவில்லை. அதன்பிறகு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்த கொடுமையை கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அலுவலகத்திற்கு அதிகாரியை தேடிச் சென்ற போது அவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டது தெரிய வந்தது.

    உடனே அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அதிகாரி விஜயகுமார் கைது செய்யப்பட்டார். அவர்மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தொழில் அதிபரிடம் ரூ.33 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Bribe

    அம்பத்தூர்:

    வேளச்சேரியை அடுத்த கீழ்கட்டளை எஸ்.ஆர். வி.எஸ். காலனியை சேர்ந்தவர் சுனில்குமார். தொழில் அதிபர்.

    இவர், மரம் அறுக்கும் தொழிற்சாலைக்காக ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன எநதிரம் வாங்க ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த எந்திரத்தை வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும்.

    எனவே மானியம் பெறுவதற்காக சுனில்குமார், காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில் மனுதாக்கல் செய்தார். தொழில் மைய உதவி இயக்குனர் அருள் இதுகுறித்து விசாரணை செய்தார்.

    அப்போது, தனக்கு ரூ.33 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் மானியம் பெறுவதற்கான உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அவர்களுடைய ஆலோசனைப்படி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அருள் குடியிருக்கும் அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கு சுனில்குமார் சென்றார். பணம் தருவதாக கூறி அவரை அழைத்தார்.

    அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அருள் வந்தார். அவரிடம் சுனில் குமார் ரசாயனம் தடவிய 33 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.

    அப்போது அங்கு ஆட்டோவில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து லஞ்ச பணத்துடன் தொழில் மைய உதவி இயக்குனர் அருள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது நிலத்தை உழுவதற்காக வேளாண் எந்திரத்தை மானியவிலையில் வாங்க முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜதுரை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வேளாண்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த உதவி அலுவலர் பாரதிதாசனை (40) சந்தித்தார். அப்போது அவர் ரூ.39 ஆயிரம் கொடுத்தால்தான் உடனே வேளாண் எந்திரம் வழங்கப்படும் என்றார்.

    இதையடுத்து ராஜதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மீதி ரூ.15 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு ராஜதுரை வந்துவிட்டார்.

    இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜதுரை பாரதிதாசனிடம் நேற்று வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாரதிதாசனை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கடலூர் லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்பு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த மாதம் லால்பேட்டையில் துணை மின்நிலைய பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். தற்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×